Wednesday, July 23, 2008

காதல் சொன்ன கோயில் மணிக்கு!

சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்க
போன கதை சொல்லட்டுமா?

தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
பட்டு போன மரத்து கீழ
படுத்து ஒண்ணும் லாபமில்லை.

“பூமத்திய ரேக எங்க?”
வாத்தியச்சி கேள்வி வெக்க
ஒங்கோலந்தான்னு சொல்லி
ஒளிஞ்ச காலமெங்க?

ஆலம் எலை மடிச்சி ஊதி
பேசி புட்ட நெனப்போட
உரக்க கத்தும் ஊமையன் போல்,
ஒந்தெரு கொழாயடியில்கொஞ்ச நேரங் கண்ண மூடி
சொக வாழ்க்கை வாழ்ந்துகிட்டேன்.

அறிஞ்ச மூஞ்சி ஆருமில்லை,
நெழல் ஒதுங்க நாதியில்லை.
பழி சொல்ல சாமியுண்டு
பழய கோயில் போயி நின்னேன்.

நெத்தியில பொட்டு வெச்சு
மீந்த சாந்த கொட்டி வெச்சு
பரிட்சை நம்பர் கிறுக்கி வெச்ச
தூணில் சத்த சாஞ்சிகிட்டேன்.

இட்டிலிய பிச்சி வீச
சண்டையிட்டு திண்ணு போன
கொளத்து மீனுவ
சொகம் கேட்டுகிட்டேன்.

உச்சி வெயில் சுட்டுதுன்னு
துள்ளி துள்ளி நீ ஓட
சூடுபட்ட ப்ரகாரத்தை
சுத்தி சுத்தி நீரூத்த
இப்போ நான் வந்த கத
சொல்லியழ நீ வேணும்.

வந்து சேந்த சேதி சொல்ல
நீ மாத்தி நானும்,
நான் மாத்தி நீயும்,
அடிச்ச மணி தேடி பாத்தேன்.

தெரியுமாடி?

நீ மாத்தி நானும்,
நான் மாத்தி நீயும்,
காதல் சொன்ன கோயில் மணிக்கு
நாக்கறுந்து போன கதை?

காதல் அழிவதில்லை…

2 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

O! My God!!!

What a great Poem?

Really Nice.

Mr. Karrthik my dear friend, I remember my golden days.
But now?

U MAKE ME FEW DROPS OF WATER IN EYES.....

ச.பிரேம்குமார் said...

கார்த்திக், ஒருவர் கவிதை நமக்கு பிடித்துப்போய் அதை மீள் பதிவு செய்தால், அதை அவர் பெயரோடு பதிவு செய்வது நலம்.

இங்கே தாங்கள் இட்டிருப்பது "ஸ்ரீ" யின் ஒற்றை அன்றில் தளத்தில் வந்து கதை. "காதல் அழிவதில்லை… " என்பது வரை பதிவு செய்த நீங்கள் அவர் பெயரையும் சேர்த்தே பதிவு செய்திருக்கலாமே

கவிதையின் சுட்டி :
http://ottraiandril.com
- ஸ்ரீ